கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த  சந்தை கொட்டாவூர்  கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி. இவரும், ஏகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் நீண்ட நாட்களாக  காதலித்து வந்துள்ளனர். வழக்கம் போல அவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களை சமரசம் செய்ய, இவரும் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கடந்த மாதம், காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, தனது மகளை கார்த்திக் கடத்தி சென்றதாக, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் கொடுத்தனர்.



தொடர்ந்து காவல் துறை விசாரணை நடத்தியதில், பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், இருவரும் வீட்டு விட்டு வெளியேறியதும், இவரும், அவர்களின் சம்மதத்துடன் வெளியேறியது தெரியவந்தது. இந்நிலையில் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் முன்னிலையில் இருவரும்  கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 

கோயிலில் நடந்த திருமணத்தை, முறைப்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடிவு செய்தனர். இதற்காக நேற்று ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு திருமணத்தை பதிவு செய்வதற்காக பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டாரும் இணைந்து வந்தனர்.



அப்பொழுது சார் பதிவாளர் அலுவலகத்தில், மணமகன் சாட்சி  கையொப்பமிட்டவுடன், பெண்ணின் தந்தையை அழைத்துள்ளனர். ஆனால் தனது ஒரே மகள், தனக்கு விருப்பமில்லாமல், திருமணம் செய்து கொண்டார் என்ற கோபத்தில் இருந்த பெண்ணின் தந்தை, கையொப்பமிட வர மறுத்துள்ளார். அப்போது கோபமடைந்த மணமகன், மாமனாரை ஆவேசமாகவும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மணப் பெண்ணை அழைத்து கொண்டு வெளியே சென்று, வீட்டிற்கு செல்லலாம், பதிவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.



 

அப்பொழுது மணமகன் வீட்டாருக்கும், மணமகள் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து தகராறு அதிகரித்து, கை கலப்பு ஏற்பட்டது. அப்பொழுது சார் பதிவாளர் அலுவலகம் முன்பு, சினிமாவில் நடப்பது போல, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து சாலையிலே இருதரப்பும் தாக்கி கொண்டனர்.  இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து, இருதரப்பினரிடமும் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து மாமனாரை ஆபாசமாக திட்டிய மணமகன், மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு மீண்டும்  பதிவு திருமணம் நடந்தது. இதனையடுத்து மணமக்கள் மற்றும் இரண்டு குடும்பமும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, பதிவு திருமணம் செய்து கொள்ள வந்து மணமகன், மாமனாரை திட்டியதால், ஏற்பட்ட அடிதடி சம்பவம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.