வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று  வழங்க ரூ 30ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில்பட்டி தாசில்தார் மற்றும் அவரது டிரைவரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.




தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விமான் நகரைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர், தன்னுடைய மனைவி சந்திராவதியின் பெயரில் கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டி பகுதியில் 36 சென்ட் நிலம் வாங்கியிருந்தார். பணத்தேவைக்காக இந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவெடுத்தார். இதற்காக தடையில்லா சான்றிதழ் பெற கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். அப்போது கோவில்பட்டி தாலுகா வட்டாட்சியர் வசந்த மல்லிகா ரூ.40,000 லஞ்சமாக கேட்டிருக்கிறார்.




நம்ம இடத்தை பிளாட் போட லஞ்சமா கேட்கீக என கோபமடைந்த ராஜாராம், இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரைத் தொடர்பு கொண்டு வட்டாட்சியர், லஞ்சம் கேட்ட விவரத்தைக் கூறியிருக்கிறார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர்கள் சுதா, அனிதா மற்றும் போலீஸார் கோவில்பட்டிக்கு வந்தனர். அவர்கள், ரசாயன பவுடர் தடவிய ரூ.30,000 ரூபாய் நோட்டுகளை ராஜாராமிடம் வழங்கினர்.




அவர், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த வட்டாட்சியர் வசந்த மல்லிகாவைச் சந்திக்கச் சென்றார். அங்கு வட்டாட்சியரின் ஓட்டுநர் கிருஷ்ணா என்பவர் மூலமாக ரூ.30,000 பணம் வட்டாட்சியர் வசந்த மல்லிகாவிடம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஓட்டுநர் கிருஷ்ணா, வட்டாட்சியர் வசந்த மல்லிகா ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் சுமார் மூன்று மணி நேரத்துக்கும்  மேல் விசாரணை நடத்தப்பட்டது.  


பின்னர், வட்டாட்சியர் வசந்த மல்லிகா, அவர் ஓட்டுநர் கிருஷ்ணா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வசந்தமல்லிகா, கடந்த மே 5-ம் தேதிதான் கோவில்பட்டி தாலுகாவின் வட்டாட்சியராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.