கோவை மாவட்டம் ஜோதிபுரம் வீரபாண்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் தனது மகனுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடை அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ராதாமணி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகையை பறித்துச் சென்றனர். இதனை அடுத்து விடாமல் துரத்தி சென்ற ராதாமணியின் மகன் நகை பறிப்பில் ஈடுபட்ட ஒரு நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார். மற்றொரு நபர் கொள்ளையடித்த நகையுடன் தப்பியோடினார். இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை அப்பகுதி மக்கள் துடியலூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


இதையடுத்து பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிநாதன் என்பதும், அவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது. மேலும் 7 ஆண்டுகளுக்கு முன்பு பழனிநாதன் ராணுவத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், தப்பியோடிய நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் காவல் முன்னாள் இராணுவ வீரர் பழனிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய முருகானந்ததை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலை வாங்கி தருவதாக மோசடி


ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் உத்தமன், ராஜேஷ்குமாரிடம் கோவை என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி 11,50,000 பெற்றுக் கொண்டு, பணி ஆணையை வழங்கியுள்ளார். அதனைக் கொண்டு பணியில் சேரச் சென்ற போது, அது போலியான பணி ஆணை என்பது தெரியவந்துள்ளது. 


இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ்குமார் பணத்தை திருப்பி தரும்படி பிரசாந்த் உத்தமனிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி அளிக்காத நிலையில் இது குறித்து ராஜேஷ்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பிரசாந்த் உத்தமன் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பிரசாந்த் உத்தமன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரிடம் இதே வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி ஆனையை வழங்கி மோசடியில் ஈடுப்பட்டதாக அதே சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண