தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், மும்பையின் தெருக்களில் நேரலை வீடியோ பதிவிட்டுக்கொண்டிருந்த போது மும்பை வாலிபர்கள் இருவர் அந்த கொரியப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றது யூட்யூபிலும் ட்விட்டரிலும் வைரலாகிய நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தென் கொரிய யூட்யூபர்


தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் தனது யூடியூபில் லைவ் செய்து கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுக்கிறேன் என்று அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். யூட்யூபர் மியோச்சி அவர்களிடம் நோ நோ என்று கூறுவது விடியோவில் தெரிகிறது.


முத்தமிட முயன்ற நபர்


இதற்கிடையில் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் அந்த பெண்ணுக்கு முத்தமிட முயல்வது விடியோவில் பதிவாகி உள்ளது. அந்த இருவரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர்கள் அந்த பெண்ணை விடவில்லை. மீண்டும் மீண்டும் அவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளார்கள். அந்த பெண் தனது வீடு அருகில்தான் என்று சொன்னபோதும் கேட்காமல் பின்தொடர்ந்து அவரை துன்புறுத்தி சென்றுள்ளனர்.






இருவரும் கைது


நடந்த சம்பவங்கள் யூடியூபில் லைவாக பலர் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரிலும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தென் கொரிய யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற மும்பை வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்: பைக்கில் 114 கி.மீ வேகம்: வித்தை காட்ட ஆசைப்பட்டு விபத்தில் உயிரிழந்த இருவர்: சிக்கிய லைவ் டெலிகாஸ்ட் வீடியோ


இந்தியாவுடனான பயணத்தை நிறுத்தமாட்டேன்


இதுகுறித்து பேசிய தென் கொரிய பெண், "வேறொரு நாட்டிலும் இது எனக்கு நடந்துள்ளது, ஆனால் அந்த நேரத்தில் என்னால் காவல்துறையை அழைக்க எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவில் மிக வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் 3 வாரங்களுக்கும் மேலாக மும்பையில் இருக்கிறேன், நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளேன். இந்த ஒரு மோசமான சம்பவம் எனது முழு பயணத்தையும் மற்றும் அற்புதமான இந்தியாவை மற்ற நாடுகளுக்கு காட்ட வேண்டும் என்ற எனது ஆர்வத்தையும் அழிக்காது, தொடர்ந்து பயணம் செய்வேன்!", என்று கூறிவதகா ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.






அரிந்தம் பாக்சி கருத்து


இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "மும்பையில் சாலையில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட கொரிய பெண்ணுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இந்த விவகாரம் தூதரகன்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாறும் நிலையில், கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயமாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும்", என்று கூறினார்.