கேரளாவைச் சேர்ந்த ஒருவர், தன் மனைவி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரை விவகாரத்து செய்ய அந்த மாநிலத்தின் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
‛என் மனைவி, இரவு நேரம் எனக்கு தெரியாமல், வேறோரு ஆணுடன் தொலைபேசியில் பேசுகிறார். அவர்களின் பேச்சு மிக ஆபாசமாக உள்ளது. தற்செயலாக அதை நான் கேட்க நேர்ந்த நிலையில், இது தொடர்பாக என் மனைவியிடம் விளக்கம் கேட்டேன்; முறையான பதில் இல்லை. இது தவறு என பலமுறை எச்சரித்தேன். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அத்தோடு இல்லாமல், ‛உங்களை விட, அவர் தான் எனக்கு மனதளவிலும், உடலளவிலும் நெருக்கமானவர்’ என்று என்னிடம் கூறுகிறார். அவருடைய நடத்தையில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இனி அவருடன் வாழ விரும்பவில்லை. அவரிடமிருந்து எனக்கு விவகாரத்து வேண்டும்,’ என்று அந்த மனுவில் சம்மந்தப்பட்ட நபர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நபர், வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கு விசாரணையின் போது, மனுதாரரான கணவர் தரப்பில் கூறப்பட்ட வாதங்களை கேட்டப் பின் நீதிபதி கவுசர் எடப்பாக்த் பல முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அவை...
‛வேறொருவருடன் பேசுவதை வைத்து ஒரு பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொள்ள முடியாது. அதற்காக அவரை மோசமானவர் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. அப்படி உறுதி செய்யவும் முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, தன் மனைவி, வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. பார்த்ததற்கான ஆதாரமும் இல்லை. ஆனால், கணவர் பல முறை எச்சரித்துள்ளார்.
அவர் எச்சரித்த பிறகும், இரவில் வேறு ஒரு ஆணுடன் போனில் ரகசியமாக மனைவி பேசுவது நல்ல பண்பு அல்ல. அது திருமண வாழ்க்கையை சீரழிக்கும். தொடர்ந்து அது நல்ல வாழ்க்கைக்கு உதவாது. மனுதாரரும் அவரது மனைவியும், இதற்கு முன் பல்வேறு காரணங்களுக்காக இரு முறை பிரிந்து, மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இனி மீண்டும் அவர்களை சேர்த்து வைத்தால், அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு விவாகரத்து வழங்குகிறேன்,’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மனைவி வேறொரு நபருடன் பேசுவதை எதிர்த்து குடும்பநல நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கு நீதி கிடைக்காமல் உயர்நீதிமன்றதை அணுகி விவகாரத்து பெற்ற கணவரின் செயலும், நீதிபதியின் கருத்தும், கேரளாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்