கேரளாவின் மலப்புரத்தில் பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் காவல் துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பலப்புழாவை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் திருச்சூர் குற்றப்பிரிவு வட்ட ஆய்வாளர் எம்.சி.பிரமோத் மீது குட்டிப்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை
பிரமோத் திருச்சூர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு குட்டிபுரம் காவல்நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ஒரு மாதத்திற்கு முன் திருச்சூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புகாரின்படி, 34 வயதான பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கோழிக்கோடு மற்றும் குட்டிப்புரத்தில் பணிபுரியும்போது பிரமோத் தன்னை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
வேலியே பயிரை மேய்வதா?
சட்டத்தை மீறுபவர்களை, குற்றம் செய்பவர்களை தண்டிக்க வேண்டிய காவல்துறையில் இருந்து ஒருவரே இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்ட செய்தி பலரிடையே காவல்துறையினர் மீதான நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. அந்த பெண் முதலில் மலப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் இந்த வழக்கு குட்டிப்புரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆலப்புழாவைச் சேர்ந்த அந்த பெண் திங்கள்கிழமை மலப்புரம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு
குட்டிபுரம் காவல் நிலையத்தில் எம்.சி.பிரமோத் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடமிருந்து எங்களுக்கு புகார் கிடைத்தது, அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஆண்டு முதல் அந்த அதிகாரி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். விசாரணை நடந்து வருகிறது” என, விசாரணை அதிகாரியான திரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பென்னி வெள்ளப்பள்ளி தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ளவரை தேடும் பணி
“புகாரின்படி, அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார். அவர் கடந்த மூன்று நாட்களாக திருச்சூரில் உள்ள தனது காவல்துறை அலுவலகத்திற்கு வரவில்லை. அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்” என டி.எஸ்.பி. மேலும் கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி, வயநாடு, குட்டிப்புரம் மற்றும் பையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து அந்த பெண்ணைத் தாக்கியதாக குட்டிபுரம் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளியை கண்டறிந்து, விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.