கேரளாவின் போதை மருந்து மாஃபியா தரப்பில் எம்.டி.எம்.ஏ போன்ற போதை மருந்துகளைத் தயாரிக்கும் உற்பத்தி நிலையங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, சென்னை முதலான நகரங்களில் இருந்து எம்.டி.எம்.ஏ போதை மருந்துகளைக் கொண்டு வருவது காவல்துறையின் கண்காணிப்பில் சிக்குவதால், கேரளாவிலேயே அவற்றை உற்பத்தி செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது கேரள மாஃபியா.
எம்.டி.எம்.ஏ என்று அழைக்கப்படும் போதை மருந்து மாத்திரை வடிவில் இருக்கும். இது எக்ஸ்டஸி என்றும், மாலி என்றும் அழைக்கப்படுகிறது.
உளவு அமைப்புகளின் தரப்பில் கேரளாவில் எம்.டி.எம்.ஏ உற்பத்தி செய்யப்படுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் பூவார் பகுதியிலும், கொச்சினின் நம்பர் 18 ஹோட்டலிலும் க்ரிஸ்டல், பவுடர் வடிவில் பல கோடி ரூபாய் மதிப்பில் கைப்பற்றப்பட்டது. அதன் மீதான விசாரணையில் இந்த போதை மருந்து விவகாரத்தின் பின்னணியில், மலையாள சினிமாவின் அதிகாரம் மிக்க மனிதர்களும், காசர்கோட் பகுதியின் பெரும் பணக்காரர்களும் இருப்பது காவல்துறையினருக்குத் தெரிய வந்துள்ளது.
மேலும், வாளையார் சோதனைச் சாவடியின் மூலமாக போதை மருந்து கடத்தல் நிகழ்வதைக் கண்டுபிடித்துள்ள காவல்துறையினர், அதன்மூலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம் முதலான மாவட்டங்களில் போதை மருந்து உற்பத்தி நிலையங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை இதுபோன்ற 12 உற்பத்தி நிலையங்களின் விவரங்களைக் கேரள காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த உற்பத்தி நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் போதை மருந்துகள் அனுப்பப்படுவதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொச்சினின் நம்பர் 18 ஹோட்டலின் உரிமையாளர் ராய் இரண்டு மாடல் பெண்களின் கொலை வழக்கில் கைதான பிறகு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், 4 இடங்களில் போதை மருந்து உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வரும் எம்.டி.எம்.ஏ போதை மருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் தரப்பில் இதுகுறித்து கூறப்பட்ட போது, இந்த எம்.டி.எம்.ஏ போதை மருந்து பல்வேறு கெமிக்கல் பொருள்கள் சேர்க்கப்பட்டு, மேலும் போதையூட்டுவதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. போதை மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட சில வேதியியல் பொருள்கள் இதில் சேர்க்கப்பட்டு, இதனை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறது.
இதுபோன்ற போதை மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்கள் அவற்றிற்கு அடிமையாவதோடு, அது அவர்களில் உடற்சோர்வையும், மனச் சோர்வையும் ஏற்படுத்துகிறது. மேலும், உற்பத்தி நிலையங்களில் பல்வேறு கெமிக்கல் பொருள்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன. ஒரு கழிவறையின் அளவில் இருக்கும் சிறிய அறையில் கூட இது உற்பத்தி செய்யப்படும் நிலையங்கள் செயல்படுவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய நகரங்களில் எம்.டி.எம்.ஏ வியாபாரம் ஆப்பிரிக்க நாட்டவர்களால் நடத்தப்படுவதாகவும், அந்த வியாபாரத்தின் வேர்கள் தாலிபான்கள் வரை நீளும் என்றும் கூறப்படுகிறது.
கேரளாவின் காவல்துறையினரும், அமலாக்கத்துறையினரும் மாநிலத்தில் உள்ள போதை மருந்து நிலையங்களைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்தப் பணியின் மீது காவல்துறையினரின் கவனம் குவிந்து வருகிறது.