கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் மாடலும், சிறு வயது நடிகையுமான சஹானா (நேற்று) மே 12, வியாழன் அன்று தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் அன்று இரவு, நள்ளிரவு 1 மணியளவில், சஹானா இறந்து கிடப்பதாக காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
மே 13 ம் தேதியான இன்று சஹானாவின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சஜ்ஜத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து சஹானாவின் தாயார் அளித்த தகவலில், “என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோலை இல்லை. அவளை நிச்சயம் கொலைதான் செய்திருப்பார்கள். சஹானா அப்பொழுது என்னிடம் அவரது கணவர் வீட்டார்கள் சித்ரவதை செய்வதாக கூறி என்னிடம் அழுவாள். தினமும் அவரது கணவர் குடித்துவிட்டு வந்து பிரச்னையை செய்வதுதான் வழக்கம்.
மேலும், சஹானா கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரியும் கொடுமை செய்வதாகவும் கூறினாள். நாங்கள் தனியாக தங்குமாறு கூறினோம். அதன் பிறகும் என் மகள் கணவர் சித்ரவதை செய்வதாகவும், பணம் வேண்டும் தெரிவித்தாள். நாங்கள் கொடுத்த 25 சவரன் தங்கத்தை பெற்று கொண்ட பின்னரும் அவரது கணவர் தொடர்ந்து கொடுமை செய்துள்ளார். அவள் பிறந்தநாளில் எங்களை சந்திக்க விரும்பியதாகவும், அவரது வீட்டார்கள் அனுமதிக்கவில்லை என்றும் எங்களிடம் கூறினாள்" என்றார்.
காசர்கோடு மாவட்டம் செருவத்தூரைச் சேர்ந்த சஹானா கடந்த சில ஆண்டுகளாக நகை விளம்பரத்தில் நடித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சஹானா சஜ்ஜத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கத்தாரில் பணிபுரிந்து வந்த சஜ்ஜாத், சஹானாவுடன் கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் வசிக்கத் தொடங்கினார். சஜ்ஜாத்துடன் இணைந்து மாமியார் மற்றும் கணவரின் சகோதரி தன்னை சித்திரவதை செய்வதாக சஹானா தனது குடும்பத்தினரிடம் கூறியபோது, அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல அவரது தாய் கோரிக்கை வைத்தார். சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோடு நகரின் பரம்பில் பஜாரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் சஹானா நேற்று தனது பிறந்தநாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சஹானாவின் சகோதரரும் இது கொலையென சந்தேகித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், சஜ்ஜாத்தின் வார்த்தையின் அடிப்படையில் தான் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் சந்தேகிக்கின்றனர். "அவர்கள் உள்ளே வரும்போது அவள் உடல் அவன் மடியில் இருந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டாதாக தெரிவித்துள்ளார். இதை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காவல்துறையினர் சஜ்ஜாத்திடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்