இஸ்லாமிய பெண்கள் வெளியில் செல்லும்போது புர்கா அணிவது அவர்களது வழக்கம் ஆகும். திரைப்படங்களில் அந்த புர்காவை ஆண்களும் அணிந்து வெளியில் செல்வது போல நகைச்சுவை காட்சிக்காகவோ, அல்லது சண்டை காட்சிக்காகவோ பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், தற்போது கேரளாவில் பெண்கள் கழிவறைக்குள் இளைஞர் புர்காவை அணிந்து கொண்டு உள்ளே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புர்கா அணிந்த இளைஞர்:
கேரளாவில் அமைந்துள்ள கொச்சி மிகவும் பிரபலமான நகரம் ஆகும். இந்த நகரத்தில் பிரபல தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இதனால், இந்த வணிக வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே ஏராளமான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பெண்கள் கழிவறைக்கு முன்பு புர்கா அணிந்த ஒரு பெண் மட்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அந்த வணிக வளாகத்தின் பாதுகாவலர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கழிவறைக்குள் ரகசிய கேமரா:
இதையடுத்து, போலீசார் வரும் முன்பு அந்த பெண்ணிடம் விசாரிக்க சென்ற பாதுகாவலர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. புர்கா அணிந்து பெண் போல நடமாடிக்கொண்டிருந்தது ஒரு இளைஞர் ஆவார். இதையடுத்து, அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அபிமன்யு என்றும், அவர் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
23 வயதே ஆன அபிமன்யு புர்காவை அணிந்து பெண் போல பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது செல்போனை ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் வைத்து கேமரா மூலமாக உள்ளே வரும் பெண்களை படம்பிடிக்கும் வகையில் செட் செய்து வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அவர் உள்ளே சென்று வெளியில் வந்தது வரை யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
கைது:
பின்னர், வெளியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததாலே அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிமன்யுவின் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பி.டெக் பட்டதாரியான இவரை வணிக வளாகத்தில் பணியாற்றும் சிலர் இழுத்துச் செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவரை சுற்றி நின்று பல பெண்களும் சரமாரியாக திட்டியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கேரளாவின் மிக பிரபலமான வணிக வளாகத்தில் பெண்கள் கழிவறைக்குள் புர்கா அணிந்து கொண்டு புகுந்து கேமராவை வைத்து படம்பிடித்த காட்சி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அபிமன்யு மீது 354 சி, 419 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இதுபோன்று வேறு எங்கேனும் சென்று பெண்களை ரகசியமாக படம் பிடித்துள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.