புதுச்சேரி: கேரள மாநிலத்தில் தாய், 2 குழந்தைகள் கொலையில் 19 ஆண்டுகளுக்குபின் 2 ராணுவ வீரர்கள் (AI technology) ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் கைது செய்து சிபிஐ.
கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி ( வயது 24). இவருக்கு கடந்த 2006ல் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த 17வது நாள் ரஞ்சனியின் தாயார் பிறப்பு சான்றிதழ் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை குறித்து கேரள போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த குமார் என்பவருக்கும் ரஞ்சனிக்கும் தொடர்பு ஏற்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்படி மகளிர் ஆணையம் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மற்றொரு ராணுவ வீரரான கண்ணூரை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் குமார் சேர்ந்து ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர். அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த 2 பேரும் தலைமறைவாகினார். இவ்வழக்கில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாத நிலையில், கடந்த 2010ல் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் AI ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தலைமறைவாக இருந்த குமார், ராஜேஷ் ஆகியோரின் உருவப்படத்தை தயாரித்து அதனை வெளியிட்டும், இணையதளம் மூலமாகவும் தேடி வந்தனர். அப்போது அதே உருவம் கொண்ட 2 பேர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ் என்பவர் பிரதீப் எனவும், குமார் என்பவர் விஷ்ணு எனவும் பெயரை மாற்றிக் கொண்டு புதுச்சேரியில் திருமணம் செய்து குழந்தைகளுடன் சேதராப்பட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சொத்துக்களையும் வாங்கி உள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய், 2 குழந்தைகள் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்கு பின் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடித்த சம்பவம் மற்ற குற்றவாளிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.