71 வயது முதியவருடன் தனிமையில் இருந்து, பின்னர் புகைப்படங்களை எடுத்துவிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக கூறி 50 லட்சம் கேட்டு மிரட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.


கேரளம்:


கேரள மாநிலம் திருச்சூரில், எருமப்பட்டி - திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ராஜி. இவர் குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் வழியாக சாவக்காடு பகுதியை சார்ந்த 71 வயது முதியவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து  வருகிறார். இதையடுத்து ராஜியும், முதியவரும் இவருடைய பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையாக இருந்து உள்ளனர். தனிமையாக இருக்கும் புகைப்படங்களை, ராஜி தனது செல்போன்களில் எடுத்துள்ளார். பின்பு இந்த நிர்வாண புகைப்படங்களை காண்பித்து, முதியவரின் உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி 50 லட்சம் ரூபாய் கேட்டு வந்துள்ளார்.




புகார்:


அவ்வப்போது மிரட்டி முதியவரிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் வரை ராஜி பறித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதியவர் இந்த விஷயங்களை கூறி குந்நங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கைது


இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர். அதை தொடர்ந்து இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக வசதியானவர் என்று தெரிந்து, ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜியின் ஆண் நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மற்றுமொரு செய்தி :





குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் உள்ள குளத்தில் தவறி விழுந்து, 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கன்னியாகுமரி:

 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் வள்ளித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் கப்பலில் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி ஸ்ரீஜா என்ற மனைவியும் இரண்டு ஆண் மற்றும் பிரதூசி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பிரதீப் தற்போது வேலை நிமித்தமாக வெளியூரில் உள்ள நிலையில், அவரது மனைவி ஸ்ரீஜா வீட்டில் பிள்ளைகளை கவனித்து வருகிறார்.

 

குழந்தையை காணவில்லை:

 

இந்த நிலையில் காலை ஆண் குழந்தைகள் இரண்டையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு தனது இரண்டு வயது பெண் குழந்தையான பிரதூசியை அழைத்து கொண்டு வீட்டின் அருகில் உள்ள சப்போட்டா மரத்தில் பழங்களை பறித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த ஸ்ரீஜா,  வீட்டினுள் குழந்தையை இருக்க வைத்துவிட்டு மொட்டை மாடிக்கு சென்று காயவைத்திருந்த துணிகளை எடுக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. 

 

புகார்:

 

குழந்தையின் கழுத்தில் 6 சவரன் தங்க நகைகள் கிடந்ததால் நகைகளுக்காக யாரேனும் தூக்கி சென்றுள்ளனரா என்று அச்சமடைந்த ஸ்ரீஜா வீட்டின் வெளியே பல இடங்களில் தேடி உள்ளார் எங்கும் கிடைக்காத நிலையில் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். 

 

அதிர்ச்சி:

 

அதில் எதிலும் எந்த தடயமும் கிடைக்காத நிலையில், அவர்களது வீட்டின் பின்புறத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து குளத்தினுள் இறங்கி தேடிய போது குளத்தினுள் மூழ்கிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.



 

இதையடுத்து தீயணைப்பு துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை குளத்தில் விழுந்து பலியான சம்பவம்,அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.