சென்னை கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில்  ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து சென்னை அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி, கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல், சென்னை செட்டிநாடு பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை குறித்து தைரியமாக வெளியே கூற ஆரம்பித்தனர். தமிழகத்தில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சென்னை அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி, கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் நாமக்கல்லில் உள்ள பள்ளி ஆகியவற்றுக்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியது.

 

 




இந்நிலையில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கத்தியில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி உண்டு உறைவிட பள்ளி முன்னாள்  மாணவிகள் அளித்த புகாரில், ஆன்மிகம் என்ற போர்வையில் தன்னை கடவுள் கிருஷ்ணர் என்று கூறிக் கொண்டும் மாணவிகளை கோபிகா என்று கூறியும், சிவசங்கர் பாபா இந்த கொடூர செயல்களை அரங்கேற்றி வருவதாக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள்  சமூகவலைதளப் பதிவில் தெரிவித்துள்ளனர். பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் கூறிய அடுக்கடுக்கான புகார்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததையடுத்து, முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம்  தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பள்ளியில் பாலியல் சீண்டல் புகார் சம்பந்தமாக விசாரணை நடத்தினர்.


தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுக்கப்பட்ட ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது





அதேபோல் இந்தப் பள்ளி முதல்வர், சட்ட ஆலோசகர் நாகராஜ் , ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஜூன் 11-ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேர் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் ஜூன் 11-ஆம் தேதி ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகாமல் தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நெஞ்சுவலி எனவும் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார்.

 

இந்நிலையில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று  கேளம்பாக்கம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.மேலும்  சிவசங்கர் பாபாவிற்கு எதிராக தற்போது ஆதாரங்களை திரட்டும் பணி நடைபெற்று வருகிறது . பாலியல் விவகாரத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் கைதாகி கொண்டிருக்கும் நிலையில், தற்போது தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் சிவசங்கர் பாபாவும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதாகியுள்ளது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.