காவிரி ஆற்றில் மூழ்கி பலியான ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் திவாகர் (வயது 25). இவர் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே கடம்பங்குறிச்சியில் உள்ள குலதெய்வமான பவுளியம்மன் கோவிலில் கிடா விருந்து வைத்திருந்தார். இதில் திவாகரின் நண்பர்களான கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் விஷ்ணு (25), கோவை ஒண்டிப்புத்தூரை  சேர்ந்த ஆதர்ஷ் (25) மற்றும் கோவையை சேர்ந்த சங்கர், நவீன் குமார், அஜித் ஆகிய ஐந்து பேர் கலந்துகொள்ள கடம்ப குறிச்சிக்கு வந்தனர். 




இவர்கள் கடம்பன்குறிச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். காவிரி ஆற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் செல்லும் நிலையில் ஆழமான பகுதியில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விஷ்ணு அவரை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கிய போது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் பீதி அடைந்த நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்களையும் காவிரி ஆற்றில் இரவு முழுவதும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாக இருக்கலாம் என கருதப்பட்டது. இதற்கிடையே போதிய வெளிச்சம் இல்லாததால் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது. 




 


இந்த நிலையில் நேற்று காலை 5:30 மணி முதல் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றின் பகுதியில் தேடினர். அப்போது காவிரி கரையோரம் இருந்த முள் செடியில் விஷ்ணு உடல் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதை அடுத்து, அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்று படுக்கைக்கு கொண்டு வந்து வாங்கல் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நன்னியூர் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் ஆதர்ஷ் உடல் மிதந்து கொண்டிருந்தது. அதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் அவருடைய உடலை மீட்டு வாங்கல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். பின்னர் இரண்டு வாலிபர்களின் உடல்களையும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிவு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண