வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு . இவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மகன் அனில்குமார் வயது (24). இவர் சேர்காடு கூட்ரோட்டில் சொந்தமாக நகை அடகு கடை நடத்தி வந்துள்ளார். மேலும் இந்த அடகு கடையை ஒட்டி, ஜூஸ் கடையும் மற்றும் ஏடிஎம்.,மும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கு பின்புறம் இடம் காலியாக முற்புதராக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் அனில்குமார். மீண்டும் மறுநாள் அனில்குமார் வழக்கம்போல அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது தான், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அடகு கடையின் சுவர், கான்கிரீட் கொண்டு கட்டபட்டிருந்ததால் சுவற்றை உடைக்க முடியவில்லை. இதனால் அடகு கடை பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு, உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றை துளையிட்டு அடகு கடையின் உள்ளே சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நகை வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை உடைத்து, அதிலிருந்த தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த அனில்குமார், இது குறித்து திருவலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அனில்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 30 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 90 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துது. இதன் மொத்த மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய். சம்பவ இடத்திற்கு வந்த ADSP சுந்தரமூர்த்தி, காட்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முயன்ற போது கொள்ளையர்கள் சிசிடிவி ஹார்டிஸ்கை கையோடு எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க திருவலம் காவல் ஆய்வாளர் ஆனந்தன், லத்தேரி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போல, இதே நபரின் கடையில் திருடு போனது குறிப்பிடத்தக்கது.