கரூர் மாவட்டத்தில் தளவாபாளையம் அருகே பரிதாபம்.


கரூர் மாவட்டம் நொய்யல் தளவாபாளையம் அருகே மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பெற்றோர் விஷம் குடித்தனர். இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 





 


தொழில் நஷ்டம்


கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 62). இவரது மனைவி பாப்பாத்தி (58). இந்த தம்பதியின் மகன் மோகன்ராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இதில் ஷேர் மார்க்கெட்டில் மோகன்ராஜுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதேபோல் வங்கியில் வாங்கிய கடனையும் கட்ட முடியவில்லை.


 




 


 


புதுவீடு கட்டியதற்கு வாங்கிய கடனையும் கட்ட முடியாததால் புது வீட்டை விற்பனை செய்து விட்டார். அதனால், மோகன்ராஜ் அய்யம்பாளையத்தில் தனது தாய், தந்தையுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தற்போது நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.


விஷம் குடித்த பெற்றோர்.


இந்நிலையில் மோகன்ராஜ் இரவு அய்யம்பாளையம் வந்து தனது தாய் தந்தையை பார்த்துவிட்டு பரமத்தி வேலூருக்கு சென்று விட்டார். காலை அய்யம்பாளையத்தை சேர்ந்த உறவினர்கள் மோகன்ராஜுக்கு போன் செய்து உனது பெற்றோர் நீ விற்பனை செய்த புதிய வீட்டின் வாசலில் மயங்கி கிடக்கின்றனர். மேலும், பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) டப்பாவும் அருகில் கிடைக்கிறது என்று கூறியுள்ளனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் விரைந்து வந்து பார்த்தார். அப்போது தந்தை ரங்கசாமி இறந்து கிடந்தார். தாய் பாப்பாத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மகனிடம் நீ வாங்கிய அதிக கடனை உன்னால் கட்ட முடியாததால் உன்னை நினைத்து கஷ்டப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.


தாய்க்கு சிகிச்சை.


இதையடுத்து பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.




குடும்பத்த தகராறில் வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.


க.பரமத்தி அருகே குடும்ப தகராறு வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முருகேசன் வயது 25 என்பவர் க.பரமத்தி அடுத்த மொஞ்சனுர் அருகே அகிலாண்டபுரம் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி தனியா வயது 20 உடன் வசித்து வந்தார். முருகேசன் வெல்டிங் கூலி தொழிலாளி. வியாபாரி முருகேசன் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.


 


 




 


குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெல்டர் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக கூறினார். மேலும், இது குறித்து இறந்தவர் மனைவி தன்யா கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்