கரூர் அருகே, பணத்திற்காக 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து, 15 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயா, அவரது மகன், மற்றும் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலையத்திற்குட்பட்ட முதலைப்பட்டி கிராமம், கீழ மேடு, பாரதி நகரைச் சேர்ந்தவர் அய்யர் என்பவரது மனைவி அன்னாச்சி ( 76.) இவர் கடந்த 25 ஆம் தேதி காலை 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அன்னாச்சியின் மகன் தமிழ்செல்வன் என்பவர் குளித்தலை காவல் நிலையத்தில் 100 நாள் வேலைக்கு சென்ற தனது தாய் அன்னாச்சி வீடு திரும்பவில்லை என புகார் செய்துள்ளார்.
புகாரையடுத்து குளித்தலை ஆய்வாளர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். விசாரணையில் மூதாட்டி அன்னாச்சி எப்போதும் கழுத்தில் நகை அணிந்து இருப்பார் என்பதால் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
100 நாள் வேலையில் இருந்த மூதாட்டியை ஒரு பள்ளி மாணவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் வீட்டு அருகில் வசித்து வரும் விஜயா என்பவர் மூதாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் தனது மகனை வைத்து மூதாட்டியை வரவழைத்து அவரது வீட்டில் வைத்து வேறு ஒரு நபர் துணையோடு மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். கழுத்தில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் பறித்துக்கொண்டு மூதாட்டியின் உடலை ஒரு சாக்கு பையில் மூட்டையாக கட்டி இரவு நேரத்தில் திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மூதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு நகைக்கடையில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மீதம் உள்ள நகைகளை குற்றவாளியான விஜயா பெண் வீட்டில், புதைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் உறவினர் ஒருவர் என 3-பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கில் மேலும் யாராவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வரும் போலீசார், காவிரி கரையில் மூதாட்டியின் உடலை தேடி வருகின்றனர். பணத்திற்காக ஆசைப்பட்டு மூதாட்டியின் கழுதை அறுத்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.