புகழூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்டதற்கு தாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நடிகை அம்பிகா.

 

கரூர் மாவட்டம், புகழூர் 4 ரோடு நாடார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (61). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். புகழூர் தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (45) திமுக கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி சபீனா புகழூர் நகராட்சி  15 வது வார்டு கவுன்சிலராக  உள்ளார்.

இந்நிலையில் கடந்த 17.08.2025 அன்று ரவி என்பவர், வார்டு கவுன்சிலர் சபீனாவிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு அவரது கணவர் நவாஸ்கான், ஆளும் கட்சியான எங்களையே கேள்வி கேட்கிறாயா என்று கடுமையாக பேசியுள்ளார். இதனால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் நவாஸ்கான், அவரது மாமனார் ஜான் பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து ரவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அதை தடுக்கச் சென்ற ரவியின் மனைவி சித்ராவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

 

இதில் மயக்கம் அடைந்த ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுபாஷினி 15 வார்டு கவுன்சிலரின் கணவர் நவாஸ் கான், மாமனார் ஜான்பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது   நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் நண்பர்கள் வீட்டிற்கு வந்த நடிகை அம்பிகா இதனை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து வழக்குப்பதிவு தாமதமாக செய்யப்பட்டுள்ளது இச்சம்பவம் FIR காப்பியாக மட்டும் இருக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா கூறுகையில், 

சித்ராவின் செய்தியை சமூக வலைதளங்களில் பார்த்து வந்துள்ளேன். கடன் மற்றும் சொத்து பிரச்சனைகளுக்கும் சண்டை என்று சொன்னால் அது பெரியதாக தெரியாது. ஆனால் தண்ணீர் வரவில்லை என்று கேட்டதற்கு இப்படி செய்துள்ளார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் எப்படி நடந்து கொண்டுள்ளார்கள். இதற்கு பேசியிருக்கலாம் அதை விட்டுவிட்டு அடிப்பது தவறு மக்கள் அனைவரும் நல்லது செய்வார்கள் என்று ஓட்டு போட்டு உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது காப்பாற்ற வேண்டிய நீங்களே அவர்களை போட்டு அடித்துள்ளீர்கள்.

 

 

நான் அரசியல் ரீதியாக இங்கு பேச வரவில்லை மனிதாபிமான அடிப்படையில் சொல்கிறேன் யாராக இருந்தாலும் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும். விவேக் காமெடியில் வருவது போல் எனக்கு அவர்களை தெரியும் இவர்களை தெரியும் என்று வருவது போல் அவர்கள் சொன்னால் காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அதை சொன்னதோடு தண்ணீரில் போடாமல் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். கவுன்சிலர், எம்எல்ஏ என்று நம்பி உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். அவர்களை உங்களது அப்பா, அம்மா ,அண்ணன், அக்கா சாணத்தில்  நின்று காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும், FIR ஒரு கதையாக போகாமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

 

மேலும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி சித்ரா கூறுகையில், எனது கணவர் பிரச்சனையில் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் எனது கணவர் தாக்கப்பட்ட முதல் தற்போது வரை நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார.  நாம் தமிழர் கட்சியின் அரவக்குறிச்சி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாள்தோறும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தனர்.