தஞ்சாவூர்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நேர்மையான புதிய தேர்தல் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 8,9,10 தேதிகளில் ஏழு மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்துவது. வரும் 13 தஞ்சையில் முழுநாள் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என்று தஞ்சையில் நடைபெற்ற வாக்குரிமை காப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வாக்குரிமை காப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ. சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி வழக்கறிஞர் கென்னடி கூட்டத்தின் நோக்கம் பற்றி உரையாற்றினார். 

Continues below advertisement

கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்கு புறமான செயல்பாட்டை கண்டித்து இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் கல்வியாளர்கள், முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகள்,குடியுரிமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. பீகாரில் தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கின் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் வாக்குத்திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் புதிய நேர்மையான தேர்தல் ஆணையம் அமைக்க வேண்டும். ஓட்டுத் திருட்டை நடத்தி முறைகேடாக ஆட்சிக்கு வந்த மோடி பாஜக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 8,9,10 தேதிகளில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பூதலூர், செங்கிப்பட்டி,வல்லம், அம்மாபேட்டை, பாபநாசம் உள்ளிட்ட ஏழு மையங்களில் மக்களிடையே தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது. வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தஞ்சையில் முழு நாள் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவர் காளியப்பன், மாவட்ட செயலாளர் தேவா,   சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன்,   சிபிஐ எம்எல் விடுதலை இயக்கத்தின் மாநகர செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தின்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அ.யோகராஜ், திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்.வி. ரெங்கராஜ்,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் நா. சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் வெ.சேவையா, அழகு. தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் இயக்க ஒருங்கிணைப்பாளரும், மக்கள் அதிகாரம் மூத்த நிர்வாகியுமான காளியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை இழந்த ஆணையமாக மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியுடன் இணைந்து மிகப் பெரிய தில்லுமுல்லுவை நடத்துகிற நிறுவனமாக மாறியுள்ளது என்பதை ராகுல் காந்தி அமல்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு சில அமைப்புகள், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் எவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து, ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பிகாரில் சிறப்பு திருத்த முறை என்கிற பெயரில் மிகப் பெரிய அளவில் பிகார் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, அவர்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றுகளைக் கொண்டு வந்தால்தான் வாக்காளர்களாக சேர்ப்போம் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஆனால், மக்கள் கையில் இருக்கும் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களை ஆணையம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

இதன் மூலம் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனக் கருதப்படுகிற மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நிரந்தரமாக நீக்குவது என்கிற ஜனநாயக விரோதமான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் செய்கிறது. இது வெறும் வாக்காளர் பிரச்னை மட்டுமல்லாமல், குடியுரிமையை இல்லாததாக்கும் வேலையை தேர்தல் ஆணையமே செய்து வரும் ஆபத்தான நிலையில் உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பெற்ற பிரதமர் மோடி பதவி விலக கோரியும் திருச்சியில் செப்டம்பர் 6 ஆம் தேதியும், தஞ்சாவூரில் 13 ஆம் தேதியும் முழு நாள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.