அதிமுக கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல்
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகரை சேர்ந்தவர் மருதை வீரன். இவர் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் குளித்தலை அருகே வடசேரியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் வசந்தாவின் கணவரும், ஒப்பந்தக்காரரும், தோகைமலை முன்னாள் ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான பழனிச்சாமி என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நில பத்திரத்தினை அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் பணம், ரூபாய் 100க்கு 10 என்ற வட்டி விகிதத்தில் பெற்றுள்ளார். தான் பெற்ற இரண்டு லட்சம் ரூபாய்க்கு வட்டியாக கடந்த ஒரு வருடத்துடன் சேர்த்து ரூபாய் 5 லட்சம் பணத்தினை கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிச்சாமியிடம் மருதை வீரன் அளித்துள்ளார்.
அப்போது நிலபத்திரத்தினை திரும்ப கேட்டபோது பணத்தினை பெற்றுக் கொண்ட பழனிச்சாமியும் அவருடைய தம்பி கண்ணன் (எ) கண்ணதாசன் ஆகிய இருவரும் மேற்கொண்டு இரண்டு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். அவ்வாறு தந்தால் தான் நில பத்திரத்தினை தர முடியும். இல்லாவிட்டால் தர முடியாது என மருதை வீரனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரும் மீதும் வழக்கு பதிந்து இன்று காலை பழனிச்சாமியை கைது செய்து கிருஷ்ணராயபுரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர், குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். இதில் கண்ணன் (எ) கண்ணதாசன் தலைமறைவாக உள்ளார்.
கரூரில் மசாஜ் செய்யட்டுமா? என்று பெண் அழைத்ததில் சொக்கி போனவரின் செயின் நகை பறிப்பு.
மசாஜ் செய்யட்டுமா? என்று பெண் அழைத்ததில் சொக்கி போன பர்னிச்சர் கடை உரிமையாளரை நிர்வாண படம் எடுத்து, மிரட்டி நகை பணம் பறிக்கப்பட்டது. திருப்பூரில் மசாஜ் செய்யட்டுமா? என்று செல்போனில் பெண் அழைத்ததில் சொக்கி போன பர்னிச்சர் கடை உரிமையாளர் சண்முகராஜை நிர்வாண படம் எடுத்து மிரட்டி நகை பணத்தை பறித்த கரூரை சேர்ந்தவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது
பர்னிச்சர் கடை உரிமையாளர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மேற்கு பகுதி அறவப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 63). இவர் பெருமாள் நல்லூர் அருகே நையாண்டம்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரண்டாம் தேதி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண், மசாஜ் செய்ய விருப்பம் இருந்தால் அழையுங்கள் என்றார். நான் சரி என்றதும் அன்று இரவு அந்தப் பெண் எனது பர்னிச்சர் கடைக்கு அருகே உள்ள அறைக்கு வந்து மசாஜ் செய்துவிட்டு, ரூ. 1200 வாங்கிச் சென்றார். பின்னர் மீண்டும் 26ம் தேதி அதே பெண் என்னை மீண்டும் தொடர்பு கொண்டு மசாஜ் செய்ய வரட்டுமா என்றார். அன்று இரவு அதே போல் அறைக்கு வந்து மசாஜ் செய்த போது, திடீரென்று அறைக்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி என்னுடைய ஆடைகளை கழட்ட சொன்னார்கள். பின்னர் அந்த பெண்ணையும் என்னையும் சேர்த்து வைத்து நிர்வாணமாக படம் எடுத்துக் கொண்டனர்.
பெண் உள்பட மூன்று பேர் கைது
பின்னர் என்னிடம் இருந்து ஒரு பவுன் தங்க மோதிரம், ஏடிஎம் கார்டு, ரகசிய எண்ணை பரித்தனர். இரண்டு லட்சம் கொடு இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டி விட்டு அந்த பெண் உட்பட 3 பேரும் சென்று விட்டனர். அந்த பெண்ணும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு எனது ஏடிஎம் கார்டில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டம் சின்னாண்டங்கோவிலை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 21), உடுமலை இளய முத்துரை சேர்ந்த புஷ்பலதா (வயது 30) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.