பொறியியல் கலந்தாய்வில் இடம் பெற்று, இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 1.48 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக 4 கட்டமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் மாணவர்களுக்கான துணைக் கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வில் இடம் பெற்று, இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். முழு நேரப் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப் பயிற்சி வகுப்புகள் (Induction Classes) நவ.14-ம் தேதி தொடங்குகின்றன. பாட வகுப்புகள் நவம்பர் 28-ம் தேதி தொடங்குகின்றன. முதல் செமஸ்டருக்கான கடைசி வேலை நாளாக அடுத்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பி.ஆர்க். முழு நேரப் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14ஆம் தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28ஆம் தேதியும் தொடங்குகின்றன. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி கடைசி வேலை நாளாக இருக்கும்.
பகுதிநேரப் படிப்புக்கான அட்டவணை
மேலும், பி.இ., பி.டெக். பகுதி நேர மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. அவர்களுக்கான கடைசி வேலை நாளாக மார்ச் 1ஆம் தேதி உள்ளது.
இவர்கள் அனைவருக்கும் முதல் செமஸ்டருக்கான செய்முறைத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 25-ம் தேதியும், எழுத்துத் தேர்வுகள் ஏப். 5-ம் தேதியும் தொடங்குகின்றன. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் மே 15-ம் தேதி தொடங்குகின்றன.
ஏற்கெனவே தொடங்கிய அறிமுக வகுப்புகள்
அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே அக். 27-ல் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த பாடப் பிரிவு, கல்லூரி, துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டு வருகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு: https://cac.annauniv.edu/Annoucement/AI/Nov%202022%20-April%202023/U.G.%20I%20Sem%20AI.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
இதையும் வாசிக்கலாம்: TN Schools: மாஸ் அறிவிப்பு. பள்ளிகளிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி.. தமிழ்நாடு அரசு அதிரடி..