கரூரில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சித்தாள் கொலை வழக்கில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மழைக்காக ஒதுங்கி இருந்த பெண்மணியை மதுபோதையில் கட்டையால் தாக்கி விட்டு, தோடுகளை எடுத்துச் சென்றதாக வாக்கு மூலம் அளித்தார்.
கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை கறிக்கடை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில் புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி (57) கனமழை பெய்து கொண்டிருந்த அதன் காரணமாக சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு கறிக்கடை முன்பு ஒதுங்கி நின்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த நாள் காலை சுமார் 7.00 மணி அளவில் முத்தாயி பின்னந்தலையில் ரத்தகாயத்துடன், சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கினர். அதில் சந்தேகத்தின் அடிப்படையில் தோகமலை அடுத்த சுக்காம்பட்டி காலனி கிராமத்தை சேர்ந்த பழனிவேலு (எ) வேலு என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மழைக்காக ஒதுங்கி நின்ற பெண்மணியிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டு
அங்கிருந்த கட்டையால் முத்தாயி பின்னந்தலையில் தாக்கி, காதில் இருந்த தோடுகளை கழற்றி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் கொலையாளியை கைது செய்த வெள்ளியணை போலீசார், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.