கரூரில் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 2 நபர்கள் போலீசாரிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


 




 


கரூர், வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி மற்றும் மோத்தீஸ் ஆகிய இருவரும் கரூர் நகரப் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அண்ணா சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பிடுங்கிச்சென்று, அந்த வாகனத்தை பயன்படுத்தி கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.


 




 


இருவரையும் பிடிக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிரமாக தேடி வந்தபொழுது, போலீசாரை கண்டவுடன் வாகனத்தை எதிர் திசையில் வேகமாக திருப்பிச்சென்றபொழுது விபத்து ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுவந்தனர்.  


 




 


இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, வழிப்பறி செய்த பொருட்களை அவர்களிடமிருந்து மீட்பதற்காக அழைத்து சென்றபொழுது, போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சித்து அருகில் இருந்த பாலத்திலிருந்து கீழே குதித்தபோது, இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்ட அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பொருட்கள் மீட்கப்பட்டு சிகிச்சை முடிந்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.