கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிலை அருகே உள்ள காளிபாளையத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் அமைந்துள்ளது.
கல்குவாரியின் உரிமையாளர் செல்வகுமார் புகைப்படம்
செல்வகுமார் என்பவரின் கல்குவாரி கடந்த 2015 ம் ஆண்டு அனுமதி முடிந்த நிலையில் தொடர்ந்து அரசு அனுமதி பெறாமல் கல்குவாரியை செயல்படுத்தி வந்தனர். அதை தொடர்ந்து ஜெகநாதன் கரூர் மாவட்ட கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தார். கல் குவாரிக்கு எதிராக புகார் கொடுத்து வரும் விவசாயி ஜெகநாதனை குவாரி உரிமையாளர் செல்வகுமார் கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கூலி படை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்தினர் அப்போது அருவா வெட்டுடன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
அது தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது வரை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெகநாதன் மீண்டும் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
கல்குவாரியின் ஓட்டுனர் சக்திவேல் புகைப்படம்
இதனை அடுத்து மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் கரூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் மூலமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை க. பரமத்தி அருகே காருடயம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான பொலிரோ வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
கல் குவாரியின் ஓட்டுனரின் உதவியாளர் ரஞ்சித் புகைப்படம்
க.பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விபத்து வழக்காக பதிவு செய்ய காவல்துறை முயன்றுள்ளனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை, கல் குவாரி உரிமையாளர் லாரி ஏற்றி கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
அதைத்தொடர்ந்து சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் வழக்கறிஞர் குணசேகரன், முகிலன், சண்முகம் உள்ளிட்டோர் உயர் காவல்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்ததுள்ளனர். அதைத்தொடர்ந்து க.பரமத்தி காவல்துறையினர் கொலை வழக்காக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
கல்குவாரி பிரச்சனையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் புகைப்படம்
கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், கல்குவாரி வேன் ஓட்டுனர் சக்திவேல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் மரண விவகாரத்தில் இறப்பிற்கு முன்பே தனக்கு ஆபத்து இருப்பதாக கூறியதாக ஜெகநாதனின் மகன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இறந்து போன விவசாயி ஜெகநாதனின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தனது தந்தை இறப்பிற்கு முன்பாக கல்குவாரி உரிமையாளர் மூலமாக எந்த நேரமும் தனக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், சமூக ஆர்வலர்கள் முகிலன், குணசேகரன் உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி ஜெகநாதன் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதேபோல் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.