2 பேருக்கு அரிவாள் வெட்டு
குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனியை சேர்ந்த முத்தையா மகன் ராஜேஷ்(30) பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது கிராமத்தில் உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்த ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் இங்கு யாரை பார்க்க வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்களை அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, அரிவாளால் ராஜேஷ் தலையில் வெட்டி உள்ளனர். இதை தடுக்க வந்த அவரது உறவினர் ராஜலிங்கம் மகன் சுதாகர்(30) என்பவரையும் வெட்டினர்.
இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா புலிவலம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பிரசாந்த் என்கிற துரைசாமி(29), சேப்பலாபட்டி வடக்கு மேட்டு தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் லட்சுமணன், நெய்தலூர் காலனி குருணிக்காரத் தெருவை சேர்ந்த கந்தன் என்கிற விக்கி, மணிவேல் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் லட்சுமணன், மணிவேல் ஆகியோர் ஏற்கனவே 2020ம் ஆண்டு பல வழக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அனுமதியின்றி சேவல் கட்டு: 2 பேர் கைது.
வாங்கல் அருகே திரு முக்கூடலூரில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சிலர் சேவல் கட்டு நடத்துவதாக வாங்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் சம்பவ இடம் சென்றார்.
அங்கு சேவல் கட்டு நடத்திக் கொண்டிருந்த 8 பேரில் கட்டளையைச் சேர்ந்த ரகு(எ) அன்பரசு(31), திருமுக்கூடலூரை சேர்ந்த திவாகர்(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய திருமுக்கூடலூரை சேர்ந்த பிரவீன்(30), செல்லகுமார்(21), சுரேஷ்(38),அரவிந்த்(30),பார்த்திபன் (எ) மொட்டை மணி(27), மகாமுனி (25) ஆகிய 6 பேரை தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தேவை.
அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, 34 படுக்கை வசதிகளுடன் தற்போது, இரண்டாம் தர பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகள் பிரிவில், கர்ப்பிணிகளுக்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங், எக்ஸ்ரே மற்றும் நவீன பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட மருத்துவமனை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
விபத்துகளில் படுகாயம் அடைவோர் அவசர சிகிச்சை பெற அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை நாடுகின்றனர். அங்கு அவசர சிகிச்சை பெற போதிய வசதி இல்லாததால் கரூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிலர் இறந்துவிடும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.எனவே, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த, அரசு முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.