கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அருகே ஓரம்புப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 44). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.  ஓலப்பாளையத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். முத்தூரில் நிதி நிறுவனத்தை பார்த்துக்கொண்டு அங்கிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் ஓலப்பாளையம் வந்து விவசாய பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அன்று வீட்டிற்கு வந்து விவசாய பணிகளை செய்து விட்டு முத்தூர் சென்று விட்டார்.


பின்னர் காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து பீரோவுக்குள் இருந்த ரூ.5 ஆயிரம் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


 


புகையிலைப் பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது.


 


 




 



கரூர் வெங்கமேடு மற்றும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் சிலர் புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வெங்கமேடு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பரமசிவம் (வயது 70) என்பவரை கைது செய்தனர். ‌கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சோதனை செய்ததில் ,மனோகரா கார்னர் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரவிச்சந்திரன் (38) என்பவரை கைது செய்தனர்.


சூதாடிய 3 பேர் கைது


கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சூடாடுவதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது முத்துராஜாபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சேகர்,  ஜோதி, சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் சீட்டு இருந்து சீட்டு கட்டு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.