குளித்தலையில் யானை தந்தம் கடத்தி வந்து விற்க முயன்ற சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனச்சரக அலுவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள் வயது 42. இவரிடம் யானைத் தந்தம் விற்பனைக்காக வைத்திருப்பதாக, சென்னை வன அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, உஷரான சென்னை வன அலுவலகம், திருச்சி மற்றும் மதுரை வன அதிகாரிகளை தொடர்பு கொண்டு குழு அமைத்து பிடிக்க உத்தரவிட்டது.
இதனை அடுத்து அமைக்கப்பட்ட குழுவினர் யானை தந்தத்தை வாங்குவது போன்று புரோக்கர் வேடத்தில் யானை தந்தம் வைத்துள்ள பெருமாளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பெருமாள் யானைத் தந்தத்தின் நீளம் அகலம் அதன் எடை ஆகிவற்றை தெரிவித்து அதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என பேரம் பேசி உள்ளார். உரிய விலை தருவதாக உறுதி அளித்த புரோக்கர் போல செயல்பட்ட வன அதிகாரிகள் யானை தந்தத்துடன் வருமாறு தெரிவித்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு குளித்தலை-மணப்பாறை சாலை நத்தமேடு என்ற இடத்திற்கு வருமாறு, பெருமாள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு வந்த வன அதிகாரிகள் குழுவினர் மாறுவேடத்தில் கண்காணிக்க துவங்கினர்.
இந்நிலையில் நேற்று மாலை பெருமாள் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேர் யானை தந்தத்துடன் நத்தமேடு பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த கரூர் மாவட்ட வனத்துறை மாவட்ட வன சரகர் தண்டபாணி தலைமையில், வானவர் ஈஸ்வரி, வன காப்பாளர்கள் சிவரஞ்சனி மற்றும் பெரியசாமி,நவீனா, திருச்சி மதுரை வன காவல் நிலைய வன சரக அலுவலர் நவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து யானை தந்தத்தை கைப்பற்றியதோடு அவர்கள் பயன்படுத்திய 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 1 ) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வி எம் எஸ் நகர் சுப்பிரமணி மகன் பெருமாள் வயது 42. மற்றும் அவரது கூட்டாளிகள் 2) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமாரபாளையம் நாராயணன் நகரை சேர்ந்த சங்கர் மகன் நாகராஜ் வயது 56. 3) திருச்சி மாவட்டம், தொட்டியம் கொசவம்பட்டி சாலையில் உள்ள கந்தசாமி மகன் ராஜா வயது 65. 4) திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா பாலசமுத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிறுவன் தமிழரசன் வயது 17. 5) கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கீழ முனையனூர் மேல தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் நடராஜன் வயது 56. ஆகிய 5 பேரையும் குளித்தலையில் உள்ள குற்றவியல் நடுவர் எண் 1; நீதிபதி பிரகதீஸ்வரன் முன்னிலையில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.