கரூரில் அமராவதி ஆற்றங்கரையில் கூட்டாளிகளுடன் மது அருந்திய முருகவேல் என்ற நபரை தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார் ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக். போதை தலைக்கேறிய நிலையில், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியபோது நண்பனையே கல்லால் அடித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து திருட்டுத்தனமாக மணல் மாட்டு வண்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத இரண்டு பேர் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி வந்து கொட்டகையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கொட்டகை அருகிலேயே அமராவதி ஆற்றங்கரையில் முருகவேல் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டு, கரூர் நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மது அருந்திய போது ஏற்பட்ட பிரச்சனையால், முருகவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் கரூர் நகர போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் மது அருந்திய போது ஏற்பட்ட பிரச்சனையால், முருகவேலுவை கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக் கல்லால் அடித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. அசோக்கை கைது செய்த கரூர் நகர போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.