கரூர் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் உள்ள பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் நாள்தோறும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்து கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் புலியூர், காந்தி கிராமம், தாந்தோன்றிமலை, சுக்காலியூர், கரூர் பேருந்து நிலையம், திருக்காம்புலியூர், வெங்கமேடு, வாங்கபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் நாமக்கல் , திருச்செங்கோடு பகுதியில் உள்ளிட்ட கல்லூரிக்கு சென்று பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட திருச்செங்கோடு தனியார் மகளிர் கல்லூரி பேருந்து வெண்ணைமலை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 மாணவிகள் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


 




நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்து வழக்கம் போல் இன்று கரூரில் இருந்து 50 மாணவியுடன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் மகேஷ் (வயது 43) என்பவர் ஓட்டி உள்ளார். கரூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வெங்கமேடு வழியாக வெண்ணமலை சென்றபோது, சாலையில் ஈரோட்டில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு வெண்ணைமலைப்பகுதியில் அரிசி கடை முகவரி கேட்டுக்கொண்டிருந்த, லாரி மீது கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பேருந்தில் வந்த 14 மாணவிகள் காயமடைந்தனர்.




உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவசர ஊர்திக்கு தகவல் அளித்ததன்பேரில், விரைந்து வந்த தனியார் அவசர ஊர்தி மூலம் கரூர் அண்ணாநகர் தனியார் மருத்துவமனைக்கு காயமுற்ற 14 மாணவிகளையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்த வெங்கமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு படையெடுத்தனர். இதனிடையே, பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தை வெங்கமேடு போலீஸார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


 




இது சம்பந்தமாக போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நிலையில் ஈரோட்டில் இருந்து அரிசி ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் மற்றும் லாரியின் உதவியாளரிடம் விபத்து குறித்து விளக்கங்களை கேட்டு வருகின்றனர்.




தற்போது ஏற்பட்ட விபத்தில் கல்லூரி பேருந்து ஓட்டுனர் இதற்கு முன்பாக சிறு, சிறு விபத்துகள் இரண்டு முறை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விபத்து முழுக்க, முழுக்க கல்லூரி பேருந்தின் ஓட்டுனர் கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்தால் நடந்ததாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பேருந்து ஓட்டுநர் மீது இதற்கு முன்பாக நடந்த விபத்து குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, போலீசார் இந்த ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 





தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் 14 மாணவிகள் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கரூர் மட்டுமல்லாது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண