சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை


 




 


 


கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.


பாலியல் வன்கொடுமை 


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 27ந் தேதி இரவு அந்தசிறுவன் அருகே உள்ள கடைக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த சிறுவனை வழிமறித்த ஆனந்த் என்கிற அறிவானந்தம் (வயது 29) என்பவர் சற்று தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு பள்ளியின் கேட் மூடி இருந்ததால் சிறுவனை சுற்றுச்சுவரில் ஏற்றிவிட்டு பிறகு அந்த சிறுவனை பள்ளி வளாகத்திற்குள் இறக்கி விட்டு தானும் உள்ளே குதித்து சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.


கைது


 


 




இதில் பயந்து போன அந்த சிறுவன் நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து அவர் கரூரில் வசிக்கும் சிறுவனின் தாயாரிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடத்தல், போக்சோ, கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அறிவானந்தை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.


இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு கூறினார்.


20 ஆண்டுகள் சிறை


இதில் சிறுவனை கடத்திய குற்றத்திற்காக அறிவானந்தனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டதவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுப்பதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.


 





அதன்படி, அறிவானந்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூ. 1 1/2 லட்சம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.