கரூர் பஸ் நிலையம் முன்புறம் உள்ள டாஸ்மாக் கடையால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். கரூர் மாவட்டத்தில்  65க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கரூர் பஸ் நிலையத்தைச் சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் பஸ் நிலையம் முன்புறம் செயல்படும் கடை முன்பாக சாலையில் அமர்ந்து மது அருந்துவதும், அவர்களுக்குள் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதும், சாலையில் செல்வோரிடம் வம்பு இழுப்பதும் தொடர்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு போதையில் சாலையில் மயங்கி கிடந்த நபரை எழுப்ப முயன்று, முடியாத நிலையில் 108க்கு போன் செய்ய, 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து அவரை எழுப்பிட சம்பந்தப்பட்ட நபர் போதையில் தள்ளாடியபடியே நடந்து சென்றார்.


இந்த நிலையில், இந்த டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு பொதுமக்கள் மத்தியில் போலீசார் முன்னிலையில் பாட்டிலை உடைத்து 2 பேர் சேர்ந்து ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்தம் சொட்ட சொட்ட அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.




இந்த கடை அருகில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடை முன்பு உள்ள கண்ணாடி ஷோகேஸ்களை உடைத்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே எப்பொழுதும் உள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள மதுபான கடையை வேறு பக்கம் மாற்ற வேண்டும் அல்லது இந்த கடைப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் நடக்கும் சண்டை சச்சரவுகளை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் ஆகும்.


இவ்வாறு பேருந்து நிலையம் முன்பு அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் அச்சப்படுகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் வந்து செல்லும் இடத்தில், இவ்வாறு அட்டூழியங்கள் நடப்பது மிகவும் மன வருத்தத்தையும், அச்சத்தையும்  ஏற்படுத்துகிறது. மேலும் பட்ட பகலில் இச்சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.