Sithara Entertainments : நீங்கள் நடிப்பில் திறமையானவரா? நடிக்க ஆசையா? சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தரும் வாய்ப்பு இதோ...
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய போஸ்ட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனது தயாரிப்பில் உருவாக்கப்பட உள்ள ஒரு புதிய திட்டத்திற்காக புது முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆடிஷன் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கல்லூரி சார்ந்த திரைப்படம் :
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தனது 18வது தயாரிப்பாக ஒரு கல்லூரி சார்ந்த திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளனர். அதற்கு முன்னணி கதாபாத்திரத்தில் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆடிஷன் தேவையான தகுதி மற்றும் விவரம் :
18 வயது முதல் 24 வயது வரை உள்ள ஆண்களுக்கும், 16 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஒரு ஆடிஷன் பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களின் ஒரு நிமிட ஆடிஷன் கிளிப்பிங் அடங்கிய பதிவை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் மெயில் ஐடிக்கு (casting@sitaraEnts.com) அல்லது அவர்களின் வாட்ஸஅப் நம்பருக்கு (8801990954) தங்களின் பதிவை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளனர். விருப்பமுள்ளவர்கள் அனுப்பும் வீடியோ கிளிப்பிங் டிக் டாக் அல்லது ரீல்ஸ் போன்ற வீடியோக்களாக இருப்பின் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
ஆடிஷனில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அனுப்பும் வீடியோ முழுமையாக தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். 1 நிமிட வீடியோ கிளிப்பிங் போதுமானது என்று தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
"ஜெர்ஸி" சூப்பர் ஹிட் :
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் இதுவரையில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது. அதில் மிகவும் பிரபலமான திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ஜெர்ஸி" திரைப்படம். இப்படத்தில் நடிகர் நானி ஒரு கிரிக்கெட்டராக சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் நடிக்கும் "வாத்தி":
மேலும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் "வாத்தி" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் நடித்து வருகின்றனர். இப்படம் 2023ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.