கரூரில் பணம் அதிமுக வட்டச் செயலாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் 3 பேர் காவல் நிலையத்தில் சரண்டைந்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசிப்பவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு திருமாநிலையூர் என்ற இடத்தில் அவரை 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அரிவாளால் கழுத்துப் பகுதியில் வெட்டி விட்டு தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த வடிவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அபாய கட்டத்தில் இருத்ததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வடிவேல் உயிரிழந்தார்.
இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் வடிவேல் முத்துராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவாவிடம், 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். செல்போன் மூலம் தொடர்ப்பு கொள்ளும் போது பேசவில்லை என கூறி தேவாவை வடிவேல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தேவா தனது சொந்த ஊரான, லாலாபேட்டை அருகேயுள்ள பொய்கைப் புதூரிலிருந்து சிலரை வரவழைத்து வடிவேலுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநர் தேவா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று இரவு ஆட்டோ ஓட்டுநர் தேவா என்ற மகாதேவன் மற்றும் அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன், மற்றும் சேகர் ஆகிய 3 பேரும் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து வடிவேலுவை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.