கர்நாடகா மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் திருமணத்திற்கு முதல் நாள் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள டி.நரசிபுரா தாலுகாவில் உள்ள ஹலேகெம்பய்யனஹுண்டி  கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா என்பவர் தனது மனைவி நாகரத்னா மற்றும் மகள் ரக்‌ஷிதாவுடன் வசித்து வந்தார். 21 வயது மகள் ரக்‌ஷிதாவுக்கு ஜூன் 24ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்ற நிலையில் திடீரென சிவண்ணா, நாகரத்னா, ரக்‌ஷிதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஹலேகெம்பய்யனஹுண்டி   கிராமத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவம் குறித்து வருணா காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று பேர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

Continues below advertisement

மேலும் சிவண்ணா வீட்டை சோதனை செய்ததில் அதில் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதனை மகள் ரக்‌ஷிதா கைப்பட எழுதியிருந்தார். அதாவது,  உல்லாஸ் கௌடா என்ற உள்ளூரைச் சேர்ந்த நபர் தனக்கு அனுப்பிய குறுந்தகவல்களையும்,  சில புகைப்படங்களையும் வைத்துக்கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு துன்புறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கும் அனுப்பி உல்லாஸ் கௌடா டார்ச்சர் செய்தார். 

இதனால் எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்கிற பயத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் மூவரின் தற்கொலைக்கு உல்லாஸ் கௌடா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்தை நிறுத்துவதாக உல்லாஸ் கௌடா ரக்‌ஷிதாவை மிரட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் சிவண்ணாவுக்கு நன்கு பழக்கப்பட்டவராக இருந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வரும் வரும் உல்லாஸ் கௌடா  ரக்‌ஷிதாவைத் திருமணம் செய்ய விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உல்லாஸ் கௌடா இதனை கெடுக்க திட்டமிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட உல்லாஸ் கௌடாவைக் கைது செய்வதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர்.  அவர் கைது செய்யப்படும் வரை உயிரிழந்தவர்கள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என காவல்துறையினரிடம் சிவண்ணா உறவினர்களும், கிராம மக்களும் வாக்குவாதம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய உதவியாளர் சி. டி. குமார் போராட்டகாரர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)