சமூக கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் ஒடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படிதான், கர்நாடகாவில் ஒரு பட்டியலின பெண்ணை கட்டி வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொம்பல் மாவட்டம் கனககிரி பகுதி ராம்பூரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அமீரேசப்பா. கடந்த ஜனவரி 3ஆம் தேதி அமீரேசப்பா என்பவரின் நிலத்தில் பட்டியலின பெண் ஒருவர் சோபம்மா தனது மாட்டை மேய்க்க அவரது இடத்தில் கட்டி வைத்துள்ளார். இதனை பார்த்த அமீரேசப்பா அந்த இடத்திற்கு சென்றார்.
பின்பு, மாட்டை எடுத்துக் கொண்டு செல்லுமாறு பல முறை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணின் இனம், மதத்தை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி, திட்டியதோடு, அவரை கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார். பட்டியலின பெண்ணை செருப்பால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தலீத் வாய்ஸ் என்ற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அமீரேசப்பா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியதாவது, ” மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது தனது மாடு தெரியாமல் அவருடன் நிலத்திற்கு சென்றுவிட்டது. இதனால் தன்னை அவர் செருப்பால் அடித்தாக” கூறியுள்ளார்.
இதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ராஜஸ்தானில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஷி மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயதான பாரத் குமார். இவர் பட்டியலின வகுப்பை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பாரத் குமார் அப்பகுதி முழுவதும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாரத் குமார் வேலை பார்த்தபோது, அவரது வேலைக்கு ஊதியமாக ரூ. 21 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர்கள் வெறும் ரூ 5 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாரத் குமார் மீதம் உள்ள தொகையை கேட்டபோது, தருகிறேன் என்று சொல்லி அந்த நபர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த பாரத் குமார், நீங்கள் பணத்தை தராவிட்டால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஒன்று சேர்ந்து பாரத் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர் கழுத்து மீது செருப்பு மாலை போட்டு சிறுநீர் குடிக்க வைத்து, அதை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.