கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவரை அவரது தோழி விஷம் வைத்து கொலை செய்ததாக மாணவரின் பெற்றோர் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக - கேரள எல்லை பாறசாலையை சேர்ந்த சாரோன் ராஜ் என்பவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் படிப்பதற்காக தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழிதடத்தில் காரக்கோணம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக வரன் தேடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 17 ம் தேதி அந்த பெண், சாரோன் ராஜை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அழைப்பை ஏற்ற சாரோனும், தனது நண்பன் ரெஜினுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தபெண் சாரனை மட்டும் வீட்டுக்குள் அழைத்து ரெஜினை வெளியே இருக்க சொல்லியிருக்கிறார். உள்ளே சென்ற சாரோனும், அந்த பெண்ணும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் அப்பெண் சாரோனுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த சாரோனும், அதன் பிறகு அந்த பெண்ணின் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
கிளம்பிய கொஞ்ச நேரத்தில் சாரோனின் உடலில் ஏதோ சில மாற்றங்கள் ஏற்பட்டுத்துள்ளது. இதையடுத்து, சாரோன் தனது நண்பன் ரெஜினிடன் தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்க, உடனடியாக ரெஜின் சாரோனை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தீவிர சிகிச்சை பெற்று வந்த சாரோன் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், அந்த இளம்பெண் கொடுத்த ஜூச் குடித்ததால்தான் தனது மகன் உயிரிழந்ததாக சாரோனின் பெற்றோர் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, பாறசாலை காவல்துறையினர் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.