கையெழுத்திடச் சென்றவர் திரும்பவில்லை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள முல்லைசேரிவிளை சேர்ந்தவர் சசிகுமார். இவர், பால்வடிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் அஜித் (22). ஐ.டி.ஐ முடித்துவிட்டு மினி லாரியில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த அஜித் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் குலசேகரம் காவல் நிலையத்தில் கையெழுத்து இட செல்வதாக கடந்த 23-ம் தேதி வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
உடலை வாங்க மறுப்பு:
இந்த நிலையில் அஜித் விஷம் குடித்து விட்டதாகவும், அவரை கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் குலசேகரம் போலீசார் அஜித்தின் வீட்டில் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அஜித் நேற்று இறந்தார். அஜித் விஷம் குடித்து தற்கொலை செய்ய வில்லை போலீசார் கொலை செய்துவிட்டதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுத்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து அஜித்தின் தந்தை சசிகுமார் மாவட்ட எஸ்.பி-க்கும் புகார் அளித்துள்ளார்.
சசிகுமார் எஸ்.பி-க்கு அளித்த புகாரில், "எனது மகன் அஜித்குமார் கடந்த 23-ம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வருவதாக கூறிச் சென்றான். மேலும் அவனது செல்போன் இருப்பதாகவும், அதையும் வாங்கி வருவதாகவும் கூறினான். காலை 9 மணிக்கு காவல் நிலையம் செல்லும் போது சந்தோஷமாகத்தான் சென்றான். மாலை 3.30 மணியளவில் குலசேகரம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்.பி.சி.ஐ.டி எனக் கூறிக்கொண்டு ஒருவர் வந்து என் மகன் எங்கே என கேட்டார். காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றாத கூறினேன். அதற்கு அவர் 'உன் மகன் அரசமூடு ஜங்சனில் வைத்து விஷம் குடித்து விட்டான், தும்பகோடு அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாக' கூறினார்.
மாலை 4 மணியளவில் குலசேகரம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சசிகுமார் வீட்டுக்கு வந்து, தன்னுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் எனக் கூறினார். நான் போக மறுத்து விட்டேன். இரவு 7.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்.எஸ்.ஐ சசிகுமார் உள்ளிட்டோர் என் வீட்டுக்கு வந்து இப்போது எங்களுடன் வரவில்லை என்றால் கைது செய்து அழைத்து செல்ல உரிமை இருக்கிறது என்றனர். இதனால் நான் வாடகைக்கு கார் எடுத்து அவர்களுடன் சென்றேன். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனது மகன் சிகிச்சையில் இருப்பதை காட்டியதுடன், செவிலியருடன் இருந்த ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கினர். பின்னர் போலீசார் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பேப்பரில் மிரட்டி கையெழுத்து வாங்கினர். போலீஸாரின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் பார்க்கும்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் வைத்து என் மகன் தாக்கப்பட்டு, அவர்களால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம்" எனக் கூறியிருந்தார்.
மர்மமான முறையில் மரணம்:
அதேசமயம், அஜித் காவல் நிலையத்தின் வெளியில் வைத்து விஷம் குடித்ததாகவும், அதை பார்த்து காவலர்கள் காப்பாற்ற முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் என்ன நடந்தது என்ற உண்மையான விபரம் உறுதி செய்யப்படாமலே உள்ளது. காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு நடைபெற்று அதன் முடிவுகள் வந்த பின்னரே, இந்த மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்