கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் கு.லாரன்ஸ். இவர் கடந்த 1991 ம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1993 முதல் 1996 வரை வனத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகிய இவர், திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினரணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாரன்ஸ் உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் அமைச்சர் லாரன்ஸுக்கு ஆண்டோ ஸ்டாலின் என்ற மகன் உள்ளார். ஆண்டோ ஸ்டாலின் கடந்த 2012 ம் ஆண்டு அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் சொந்தமாக லட்சியா எண்டெர்பிரைசஸ் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார். இந்த தொழிலில் ஆண்டோ ஸ்டாலினுக்கு முற்றிலும் முன் அனுபவம் இல்லை. இதன் காரணமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை தனது நிறுவனத்தில் மேனேஜராக நியமித்தார்.
இதை பயன்படுத்திக்கொண்ட ரமேஷ் குமார், 2012 முதல் 2018 வரை கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ரமேஷ் தனது மனைவி பிரேம சுதா மற்றும் நண்பர் சுதாகரன் பெயரில் 116 போலியான நிறுவனங்களை உருவாக்கி, அதன் பேரில் 30 கோடி ரூபாய் வரை பைனான்ஸ் பெற்று மோசடி செய்துள்ளார்.
6 வருடங்களாக தனது நிறுவனத்தில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதால், 2018ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தின் கணக்குகளை சரிப்பார்த்தபோது 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருந்தை கண்டு ஆண்டோ ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஆண்டோ ஸ்டாலின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான ரமேஷை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாகி இருந்த ரமேஷின் மனைவி பிரேம சுதா மற்றும் ரமேஷின் நண்பர் சுதாகரனை தற்போது கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடம் இருந்து பி.எம்.டபுள்யூ உள்ளிட்ட 4 கார் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 5 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளனர்.
இந்தநிலையில், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ரமேஷின் மாமனார் வேணுகோபால், மாமியார் கீதாவானி ஆகியோரையும் பொருளாதார குற்றப்பிரிவினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்