போலீஸ்-பட்டாளம் பிரச்சனை, ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அது அதிகாரம் சார்ந்த மோதல். யாருக்கு அதிக அதிகாரம், நான் தான் பெரியவன் என்கிற மோதலும் காரணமாக இருக்கலாம். அதன் தொடர்ச்சி தான், கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ்காரர் மீது சிஆர்பிஎப் வீரர் நடத்திய தாக்குதல். மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக அழைக்க வந்த போலீஸ்காரரை, பின் தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கியுள்ளார் சிஆர்பிஎப்., வீரர்.

வீட்டில் வைத்து அடித்தால், தான் யார் என்று தெரியாமல் போகும் என்பதால், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, போலீஸ் முன்னிலையில் அடித்து கெத்துக் காட்ட நினைத்து, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சிஆர்பிஎப் .,வீரரின் பரிதாப நிலைக்கு காரணம் என்ன?

 

 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட மூவாற்றுமுகம் அருகே ,எருக்கலன்விளையை சேர்ந்தவர் CRPF வீரரான விஜின்ராஜ் (40வயது).  இவர் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுவருவதாக தெரிகிறது. இவர் 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுனர் மணியன் என்பவரிடம் அவரது மகனுக்கு அரசு வேலைவாக்கிதருவதாக கூறி பணம் வாங்கியுள்ளதாக கூறி மணியன் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். 



இந்த புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை மைதானத்தில் விசாரணை நடைபெறவிருந்த நிலையில்,  காவல்துறை பெட்டிசன் மேளாவில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதற்கான அழைப்பாணையை   திருவட்டார் காவல்நிலைய தலைமை காவலர் ஸ்டாலின் என்பவர்,  ராணுவவீரரான விஜினின் வீட்டிற்கு நேரில் கொண்டு சென்று கொடுத்துள்ளார்.



இதையடுத்து அந்த அழைப்பாணையை பெற்றுக்கொண்ட விஜின்ராஜ்,  தலைமை காவலர் ஸ்டாலினை பின் தொடர்ந்து தனது காரில் திருவட்டார் காவல்நிலையம் வந்துள்ளார்.  அதை தொடர்ந்து காவல்நிலைய வளாகத்தில் தலைமை காவலர் ஸ்டாலினை தடுத்து நிறுத்திய விஜின்ராஜ், ‛தனக்கு வீடு தேடி வந்த அழைப்பாணை அளித்தது ஏன்’ என தகராறு செய்துள்ளார். உயர் அதிகாரிகள் சொல்லியதை செய்ததாக தலைமைக் காவல் விளக்கம் அளித்த நிலையில், அதை ஏற்க மறுத்த விஜின் ராஜ், தலைமைக் காவல் ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தினர். 



போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஸ்டாலின் நிலைகுலைந்து போனார். தன் மீதான தாக்குதல் குறித்து தலைமை காவலர் ஸ்டாலின் அளித்த புகாரின் அடிப்படையில் ராணுவவீரர் விஜின்ராஜ் மீது வழக்கு பதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ராணுவவீரர் காவல்நிலைய வளாகத்தில் தலைமை காவலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பானது.