கொடுத்த பணத்தை திருப்பி தராததால் ரயில்வே ஊழியரை கொலை செய்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பியோடிய ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.


அடையாளம் தெரியாத உடல் 


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே கடந்த மாதம் 29-ஆம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று சாலை ஓரத்தில் தலையிலும், கழுத்திலும் ரத்த காயங்களுடன் கிடந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைப் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் இது கொலை என்பது தெரிய வந்தது.


வழக்கு பதிவு செய்து விசாரணை


அந்த அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கார்த்திக் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


விசாரணையில் வெளியான தகவல்


இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பெரிய மேலமையூர், மாதா கோவில் தெருவை சேர்ந்த பாபி என்கின்ற பாபு மகன் ரமேஷ் வயது 47, இவர் ரயில்வே துறையில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். 


ரமேஷ் செங்கல்பட்டு, நத்தம், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவரது மனைவி தமிழ் செல்வியிடம் சுமார் 13 லட்ச ரூபாய் கடனாக பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ரமேஷ் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.


ரமேஷை கடத்திய கார்த்திக்


இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வந்துள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவரது கூட்டாளியான ஸ்ரீநாத் மற்றும் செங்கல்பட்டு பெரிய நத்தத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகன் சிவா என்கின்ற நொண்டி சிவா வயது 35, கார்த்திக் மனைவி தமிழ்ச்செல்வி வயது 27 ஆகியோர் ரமேஷை கடத்திக் கொண்டு சென்று அவரை தாக்கியுள்ளனர்.


இதனால் பயந்து போன ரமேஷ் தனது மனைவி உத்திரமேரூரில் இருப்பதாகவும் அவரிடம் பணம் இருக்கிறது வாங்கித் தருகிறேன் . என்னை விட்டு விடுங்கள் என்று கூறி கெஞ்சியுள்ளார், உடனே ரமேஷை அழைத்துக் கொண்டு உத்திரமேரூர் வந்துள்ளனர்.


கொடூர கொலை


உத்திரமேரூர் வந்த பிறகு எனது மனைவி காஞ்சிபுரத்தில் இருக்கிறார் என்று ரமேஷ் கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர் இதில் ரமேஷ் சுயநலையில்லாமல் சரிந்து விழுந்துள்ளார். உடனே அவர் தலையில் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்து மருத்துவன்பாடி கூட்டுச்சாலையில், அவரது உடலை வீசி சென்றது போலீஸாரின் விசாரணை தெரிய வந்துள்ளது.


இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்ரீநாத் தலைமறைவாக உள்ள நிலையில் கார்த்திக் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் சிவா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வாங்கிய கடனை திருப்பித் தராத ரயில்வே ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.