பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தம்பதிக்கு தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழ்நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் 'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை' கொண்டாடப்பட்டது, பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, சென்னையில் பணிபுரிந்த பல ஊழியர்கள் தங்களது சொந்த கிராமத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர். இதனால் சென்னையை ஒட்டி இருந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மிக அதிகமாக இருந்தது.

 

அவ்வகையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழம்பி அருகே தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் ஓய்விற்காக காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு சென்னை ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொரட்டூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியம் வேலூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் அங்கு வந்தார்.

 

"சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்"

 

பொங்கல் விடுமுறைக்காக தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சந்தேகம் கொண்டு காரின் முன்புறம் வழிமறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி காரில் இருந்த நபர்களிடம் தான் ஒரு போலீஸ் என்பதால் மிரட்டல் தொணியில் விசாரணை மேற்கொண்டு இருந்தார். இதனை அவ்வழியாக ரோந்து வந்த காவல் உயர் அதிகாரி ஒருவர் சாலையில் ஓரம் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டு அருகில் சென்று விசாரித்துள்ளார்.

 

தீவிர விசாரணை

 

அப்போது காவலர் அவரை யாரென தெரியாமல் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் பணிபுரிவதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி காவலர் பிரபாகரன் மற்றும் காரில் இருந்தவர்களை பாலு செட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் காவலர் பிரபாகரன் காஞ்சிபுரத்தில் பணிபுரிவதாக பொய்யாக கூறியதையடுத்து, ஆய்வாளர் அவரை தீவிர விசாரணை நடத்தி , காரில் பயணம் செய்த நபர்களிடம் புகார் பெற்று அவர் மீது மிரட்டியது, வழிப்பறி நோக்கில் செயல்பட்டது என வழக்கு பதிந்து கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

"காவலர் கைது"

 

கடந்த ஒரு மாதமாக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன் பணம் நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டது அவர்களிடமிருந்து, கத்தி வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரை ஒருவரை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இச்செயல்கள் நடைபெற்று வருவதை தடுக்கும் விதமாகவே கடந்த 5 நாட்களாக சென்னை - திருச்சி , சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறை தீவிர வாகன போந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் காவலர் பிரபாகரன் வழிப்பறி முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் காவலர்கள் என்றால் தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சம்பவம் நடைபெற்றால் மட்டுமே நேரடியாக அதில் ஆஜராக வேண்டும் எனவும், பிற காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்றால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.