காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராம்குமார் (30). இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ராம்குமார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி சினிமா, கடற்கரை போன்ற பல இடங்களுக்கு இளம் பெண்ணுடன் சுற்றித்திரிந்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை கர்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நேற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி குற்றம் சுமத்தப்பட்ட ராம்குமார் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் ராம்குமாருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் சசிரேகா வாதாடினார்.