படப்பை குணா
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இவற்றில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவர் மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளதுரை
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருந்தனார்.
கூட்டாளிகள் கைது
படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியான போந்தூர் சிவா மற்றும் போந்தூர் சேட்டு ஆகிய இருவரை கைது செய்தனர். அதேபோல படப்பை குணாவின் ஆதரவாளராக இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தென்னரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பயத்துடன் இருந்தது வந்தனர் . இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் பரபரப்புடன் இருந்து வந்தது.
என்கவுன்டரில் இருந்து காப்பாற்றுங்கள்
இதனிடையே, மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக எனது கணவர் வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் மிரட்டல்கள் வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் தனது கணவர் சரணடைய தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். அப்போது, காவல்துறை தரப்பில் என்கவுன்டர் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடைந்தால் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
சுற்றிவளைத்த காவல்துறை
படப்பை குணாவை கைது செய்தே ஆக வேண்டும் என காவல்துறையினர் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர் . அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவருக்கு சொந்தமான 15 வாகனங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பயந்து சரணடைந்த குணா
இந்நிலையில், தான் படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சைதாப்பேட்டை குற்றவியல் எண் 17 நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் படப்பை குணா ஆஜரானார் . இதனைத் தொடர்ந்து அவரை வருகின்ற 31ம் தேதி அதாவது ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பை குணா திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கை
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் படைப்பை குணாவின் மீது புதிதாக 12 வழக்குகள் போடப்பட்டு உள்ளன . அவற்றில் ஒரு வழக்கில் மட்டுமே படப்பை குணா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அடுத்த கட்டமாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் படப்பை குணாவை விசாரணைக்கு எடுத்து விசாரிப்பதற்கு காஞ்சிபுரம் காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது .