கடன் கொடுத்தவர்கள் செய்த தொல்லையால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த காஞ்சிபுரத்தில் நகை கடையில் திருடிய இளம்பெண். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கைது செய்த விஷ்ணு காஞ்சி போலீசார்.
செயினை திருடிக்கொண்டு தப்பி ஓட்டம்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடை ஒன்றில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை வாங்குவது போல வந்த டிப் டாப் உடை அணிந்த பெண், நகைக்கடை பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டுவிட்டு இரண்டு தங்க செயின்களை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தனியார் நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விஷ்ணு காஞ்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், நகைக்கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டிப்டாப் பெண்மணியை தீவிரமாக தேடி வந்தனர்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடியதில் வாலாஜாபாத் தாலுக்கா புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி( 27) என்ற இளம் பெண் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காயத்ரியை விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் காயத்ரிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, காஞ்சிபுரம் நகைக்கடையில் செயின்களை திருடி சென்றதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விஷ்ணு காஞ்சி போலீசார் இரண்டு தங்க செயின்களை பறிமுதல் செய்து கொண்டு காயத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளம் பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இளம்பெண் நகைகளை திருடிச் சென்று ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்