காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் அருகே, சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தி  கஞ்சா விற்பனை அமோகம். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்களையும் கஞ்சா போதைக்கு அடிமைப்படுத்திய  விற்பனையாளர் பிரவீன் குமார், நான் ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் என காவல் அதிகாரிகளிடம் விந்தையாகப் பேசிய விநோதம்...


நகரின் மையப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் இரண்டே கால் கிலோ கஞ்சா பறிமுதல். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி.


காமாட்சி அம்மன் ஆலயம்


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மையப் பகுதியில்,  உலகப் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் , சங்கர மடம் , ஆதி காமாட்சி கோவில், குமர கோட்டம்,  ஏகாம்பரநாதர் கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளது. பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் முக்கிய பகுதியான இந்த பகுதியில் ராஜ வீதியை ஒட்டி உள்ள இராயன்குட்டை என்ற இடத்தில் வசித்து வரும் பிரவீன் குமார் (வயது 52) .


இவர்  ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து , அதை சிறுசிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து, கோவில்களுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளிடமும் , அதே போல பூக்கடை சத்திரம் என்ற பகுதியில்  மூட்டை தூக்கும் தொழிலாளிகளிடமும்  கஞ்சா விற்பனை செய்து வருகிறார் என்ற ரகசிய தகவல்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்தது.  அந்த தகவலின் அடிப்படையில் நகரின் மையப் பகுதியில் வசித்து வரும் பிரவீன் குமார் வீட்டுக்குள் காவல்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து  அனைத்து இடங்களையும் சல்லடை சல்லடையாக தேடிப் பார்த்ததில் வீட்டின் உள்ளே ஆங்காங்கே சிறு சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கப்பட்டிருந்த  சுமார் இரண்டேகால் கிலோ எடையுள்ள கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


கஞ்சா விற்பனை


பிரவீன் குமாரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்த போது,  நான் ஸ்ட்ரைட் ஃபார்வர்ட் சுற்றுலா பயணிகளுக்கும் , மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் தான் நான் கஞ்சா விற்பேன் எனக்கூறி காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்தார்.  


கைது செய்யப்பட்ட பிரவீன் குமார் மீது காஞ்சிபுரம் , சுங்குவார்சத்திரம்,  ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நான்கு காவல் நிலையங்களில் ஏற்கனவே 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. திருட்டு வழக்கில் அதிக பாதுகாப்பு இல்லாததால் கஞ்சா விற்பனையில் முழு நேரமும் இறங்கி விட்டதாகவும் பிரவீன் குமார் கூறியுள்ளார்.