தற்காலிக பெண் பணியாளர் வெற்றிச்செல்வி மீது கனரக லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை கைது செய்து உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தாலுகா போலீசார்.

 

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம், அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. எம்.காம் பட்டதாரி ஆன இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று பணி முடித்துவிட்டு தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்த போது பெரியார் நகர் கூட்டு சாலை அருகே வாலாஜாபாத்தில் இருந்து, உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டு இருந்த கனரக லாரி வெற்றிச்செல்வி மீது மோதியதில் சாலையில் விழுந்த நிலையில் லாரி சக்கரத்தில் சிக்கி சுமார் பத்து மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தலையின் ஒருபகுதி முழுவதும் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே வெற்றி செல்வி உயிரிழந்தார்.

 


விபத்து நடைபெற்ற இடத்தில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 

மக்கள் தர்ம அடி அடித்து 

 

இந்த விபத்தைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்க முயற்சித்த நிலையில், அவரது முகம் ஒரு பகுதி சிதைந்து உடல் மட்டுமே கிடைத்தது. உடனடியாக லாரி ஓட்டுநரை பிடித்து அப்பகுதி மக்கள் தர்ம அடி அடித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து விபத்தில் உயிரிழந்த வெற்றிச்செல்வி உடலை உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 


விபத்தை ஏற்படுத்திய கனரக லாரி


 

 

தந்தை இல்லாத நிலையில், தாய் தனியார் உணவகத்தில் பணிபுரியும் நிலையில் இவரை பட்டதாரி ஆக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,  லாரி ஓட்டுநர் மிகுந்த போதையில் இருந்ததாக கூறுகின்றனர்.

 

தொடரும் விபத்துக்கள்  


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் அதிகளவு செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ந்து வரும் நகரம் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டிடங்களும் அதிக அளவு உருவாகி வருகின்றன.  


 



விபத்து நடைபெற்ற இடத்தில் தீவிர விசாரணை


 


அதேபோன்று காஞ்சிபுரம் நகர் பகுதியில் பதிவேறு இடங்களிலும் லாரிகள் பகல் நேரங்களில் வருவதற்கு தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் தடையை மீறி லாரிகள் வருவதும் அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர் கடை ஆகியுள்ளது.  எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது