காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே வி.ஆர்.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன் (34), இவர் அப்பகுதியில் மிக செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார். வீரபத்திரன் மீது ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 11வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தலைமை அறிவித்த  காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளரை எதிர்த்து, ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக நகர செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்திக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார்.



 

இந்நிலையில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே வழக்கம்போல வீரா நேற்று நல்லிரவு நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் இருந்து இறங்கி வீராவை சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டினர். இதை கண்ட அப்பகுதி மக்கள் பயங்கர கூச்சலிட்டனர் இதனால் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர்.



 

பின்னர், ரத்தவெள்ளத்தில் கிடந்த வீராவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீ பெரும்புதூர் போலீசார்  விசாரணையை தொடங்கி உள்ளனர்.



 

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏற்கனவே கவுன்சிலர் வீரபத்திரன் இருக்கும் பலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதேபோல் அதே பகுதியில் போட்டியிட்டு கவுன்சிலர் தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்கும் இவருக்கும் முன்பகை இருந்துள்ளது. இதன் காரணமாக வீரபத்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்