காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (42). இவரது மனைவி மனோ சித்ரா (36). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் படப்பை, ஆத்தனஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர்.
அந்த வகையில் படப்பை பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் ரூ.8 லட்சத்து 50000 பணத்தை இவர்களிடம் கட்டி உள்ளார். இந்நிலையில் இரு மாதங்களாக கட்டிய பணத்தை திரும்ப கேட்ட போது பணம் தராமல் இழுத்து அடித்து வந்ததோடு செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வி சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த தங்கராஜ், மனோ சித்ரா தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் பண மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்கானிக் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் கணேசன். இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை மூடிவிட்டு வெளியில் சில இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள் ஒரு ராயல் என்ஃபீல்டு வாகனத்தையும் மற்றொரு வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் இல்லாதது அறிந்து மாமல்லபுரம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அருகில் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அதில் இரண்டு மர்மநபர்கள் வாகனத்தை திருடி செல்வது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மாமல்லபுரம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்