ஸ்ரீபெரும்புதூர் அருகே இடிதாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு
இடியுடன் கூடிய கனமழை
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவப்பொழுது விட்டு விட்டு கனமழையானது பெய்து வருகிறது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (21), இவர் தண்டலத்தில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் பீ டெக் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள்
அப்போது கல்லூரி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வினய் குமார் தன்னுடன் படிக்கும் தன் ஊரைச் சேர்ந்த ரேவனு, திவ்ய தேஜாவுடன், பாப்பான் சத்திரத்தில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது, சவீதா கல்லூரி அருகிலேயே பெங்களூர் சென்னை தேசிய சாலையில் திடீரென வினய் குமார் மீது இடி தாக்கி உள்ளது.
சம்பவ இடத்திலேயே பிரிந்த உயிர்
இதனால் தலையில் பலத்த காயத்துடன் வினய் குமார் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே உடனிருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆம்புலன்ஸ் வரவழைத்து சவீதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வினய் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வினய் குமாரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இடித்தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பிற இடங்களில் மழை தொடருமா?
சென்னையில் அடுத்த 3 மணி நேரங்களுக்குள் இரண்டு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்டோபர் 16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.