காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே கஞ்சா போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்கள். சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞர்களை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர்.
போக்குவரத்து காவலரான சேகர் காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள செங்கழு நீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்பொழுது தவறான வழியில் ஆட்டோவில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திக்கேட்டு உள்ளார். கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்கள் போக்குவரத்து காவலர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு திடீரென சேகரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதில் கைகளில் காயம் அடைந்து நிலைகுலைந்துபோன போக்குவரத்து காவலர் சேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 3 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் போக்குவரத்துக் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையின் தொடர்புகொண்டு கேட்டபொழுது, போக்குவரத்து காவலரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும் நபர்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்