காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை புறநகர் பகுதி அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில் , சுற்றுவட்டார பகுதி பொது மக்களுக்கு பரிச்சயமான கோவில் வல்லக்கோட்டை முருகன் கோவில். இங்கு முதல்நிலை செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் சிந்துமதி.  இவர் அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர் ஒருவரின் பெயரில் காசோலை எடுத்து கோயில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஆணையரின் அனுமதியின்றி கோயில் வருமானத்தில் கார் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்கள் தரப்பில் எழுந்தன.



இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பெயரில் மண்டல தணிக்கை அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் தற்காலிக ஊழியரின் காசோலை வாயிலாக 14 லட்சம் வரை கையாடல் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த செலவை பலவகை ரசீதுகளில் பதிவு செய்ததும் கோயில் நிதியில் தேவையற்ற செலவுகள் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து அறிக்கை தயார் செய்து ஆணையருக்கு அனுப்பப்பட்டது குழுவினர் அளித்த அறிக்கையின்படி முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதியை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் குமரகுரு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இதனைத்தொடர்ந்து முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதி செய்துள்ள வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது இதில் கோடிக்கணக்கில் அவர் முறைகேடாக செலவு செய்து இருப்பதாக அறநிலை துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே செயல் அலுவலர் சிந்து மதி இதற்கு முன்பு பணியாற்றிய கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து, சிலமாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.



ஏற்கனவே, ஒரு கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்தால், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தும் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 14 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் சிந்துமதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல கோவில் செயல் அலுவலர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X